தமிழகம்

தமிழகம் முழுவதும் ஜூலை 29 முதல் ஆக.11 வரை 1,577 ரவுடிகள் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் போலீஸார் மேற்கொண்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையில் சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக 1,577 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தீவிரப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரை சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரவுடிகள் மற்றும் குற்ற பின்னணி கொண்டவர்கள் என மொத்தம் 52,279 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 1,577 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இதே காலக்கட்டத்தில் பிணையில் (ஜாமீன்) வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ரவுடிகள் மற்றும் குற்ற பின்னணி கொண்டவர்கள் என 3,288 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை நிறைவேற்றுவதற்கும், தலைமறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்வதற்கும் போலீஸார் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்பி-க்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள், ரவுடிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர் கண்காணிப்பை அதிகரிக்கும்படியும், வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு மூலம் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, சட்டம் -ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘போலீஸாரின் இந்த தொடர் நடவடிக்கைகளால் ரவுடிகள் மீதான கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு பிடியாணைகள் நிறைவேற்றுவதும் அதிகரித்துள்ளது. சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனர்.

SCROLL FOR NEXT