‘அவார்டு' நகர் (கிழக்கு) மாவட்ட தாமரைக் கட்சியின் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் ‘ரெங்க’த் தொழிலதிபர் அவர். இவர் தான் மாவட்டத்தின் ஒட்டுமொத்த கட்சிக்கும் ‘ஊக்க மருந்தாக’ இருக்கிறார். 2021 தேர்தலிலேயே இவர் ‘அவார்டு’ நகரை தனக்காக எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் ‘அவார்டு’ நகர் தொகுதியை தனது அண்ணனுக்காக கேட்டார். அப்போதும் நடிகையின் திடீர் வரவால் அது நடக்காமல் போனது.
இந்த நிலையில், இப்போதும் அந்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு தொகுதியை தாமரைக் கட்சி தலைவர் தனது ’கோபால’ நண்பருக்காக தயார்படுத்துகிறார். தலைவருக்கு ‘துணையா’ இருக்கும் அந்தத் தலைவரும், ‘மக்கள் சந்திப்பு’ என்று சொல்லி கிராமங்களில் தனக்காக பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டாராம்.
இதனால் நிச்சயம் அதே மாவட்டத்தில் இன்னொரு தொகுதி தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து போனதால் அப்செட்டான ‘ரெங்க’த் தொழிலதிபர் “கட்சிக்கு செலவு செய்ய மட்டும் நாங்க வேணும்... தேர்தல்னா மட்டும் யாரையாவது கூட்டிட்டு வந்து நிறுத்துவீங்களா? எனக்கு கட்சிப் பொறுப்பே வேண்டாம்... நான்பாட்டுக்கு தொழிலைப் பாத்துட்டுப் போறேன்” என்று சொல்லி கட்சி நடவடிக்கைகளை விட்டே ஒதுங்கிவிட்டாராம்.
இதைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போன தாமரைக் கட்சி தலைவர், தொழிலதிபரை நேரில் சந்தித்து, “இந்த முறை ‘அவார்டு’ நகர் உங்களுக்குத்தான்” என்று சமாதானம் சொல்லி மீண்டும் அவரை கட்சிப் பணிக்கு கொண்டு வந்திருக்கிறாராம். அப்படியானால், தனக்கே சீட் என திருவிளையாடல் புராணத்து முருகன் கணக்காய் தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்ட தலைவரின் ‘கோபால’ நண்பரின் கதி?