தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும், அதன் தலைவர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளது கட்சியின் வளர்ச்சிக்கும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பெருந்துணையாக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு கனவுகளை மக்களுக்கு விற்று வருகிறார். அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும், நாட்டில் வறுமையே இருக்காது, புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் போன்ற அவரது வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் வெறும் கனவாகவே கலைந்து விட்டன. 83-வது சுதந்திர தினவிழாவில் டெல்லி செங்கோட்டையில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றுவதே காங்கிரஸின் இலக்காகும்.
நாட்டில் 80 ஆண்டுகள் கடந்த பின்னரும் தீண்டாமை கொடுமை நிலவுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. காந்தி, நேரு, காமராஜர் போன்ற தலைவர்கள் எந்த வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராடினார்களோ, அந்த வெறுப்பு அரசியல் தற்போது தீவிரமடைந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போன்ற மூத்த தலைவருக்கே அவமானம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்துப் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சரோ மவுனம் காப்பது கவலையளிக்கிறது. ஆர்எஸ்எஸ்-ஸின் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ராகுல் காந்தி ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்தினார். வெறுப்புக்கு எதிரான காங்கிரஸின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
தமிழகம் புதிய தலைமையின் கீழ் ஒரு புதிய திசையை நோக்கி நகர்கிறது. இந்த அரசு, மக்களின் வரலாற்றுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.