பாமக தலைவர் அன்புமணி

 
தமிழகம்

“சிபிஐ, சிபிஎம் உறுப்பினர்கள் விவரங்களை கேட்ட வட்டாட்சியர் மீது நடவடிக்கை தேவை” - அன்புமணி

அனலி

சென்னை: “சிபிஐ, சிபிஎம் போன்ற பொதுவுடமைக் கட்சியினரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் குறித்த விவரங்களை சில மணி நேரங்களில் திரட்டி  வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்று குஜிலியம்பாறை வட்டாட்சியர்  அய்யாசாமி ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எந்த காரணமும் இல்லாமல் பொதுவுடைமை கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை குற்றவாளிகளைப் போல நினைத்து அவர்களின் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்திய விடுதலைக்கு முன்பு சில கட்சிகள் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும்,  நெருக்கடி நிலை காலத்திலும் தான்  ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் கட்சிகள் போராடுவதைத் தடுக்க  அரசியல் கட்சியினரின்  விவரங்களை கடைநிலை அதிகாரிகளைக் கொண்டு  சேகரிப்பது வழக்கமாக இருந்தது. ஆங்கிலேயர்களும், அடக்குமுறையாளர்களும் பயன்படுத்திய அதே சட்டவிரோத வித்தையை ஒரு வட்டாட்சியரும் பயன்படுத்தியிருப்பது அதிகார அத்துமீறல் ஆகும், இதை சகித்துக் கொள்ள முடியாது.

தனிநபர் விவரங்களை சேகரிக்கும் அளவுக்கு பொதுவுடைமைக் கட்சியினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட வட்டாட்சியரின் தன்னிச்சையான, மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து  குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. தமக்கு எதிராக பொதுவுடமை கட்சி போராட்டம் அறிவித்திருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இப்படி  ஓர் அடக்குமுறையை  வட்டாட்சியர்  ஏவி விட்டுள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் இது தொடர்பாக குஜிலியம்பாறை வட்டாட்சியர் நேற்று நண்பகலில் வெளியிட்ட சுற்றறிக்கையின் நகல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்,  பழனி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டிருப்பதும்,  அதைப் பார்த்த பிறகும்  குஜிலியம்பாறை  வட்டாட்சியரின் அத்துமீறிய செயலை கண்டிக்கவோ, அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ  அந்த உயரதிகாரிகள் முன்வரவில்லை என்பது தான்.

மக்களின் நலன்களுக்காகவும்,  உரிமைகளுக்காகவும் போராடும் அதிகாரம்  இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி  அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அதைப் பறிக்கும் அதிகாரமோ, அதற்காக அச்சுறுத்தும் அதிகாரமோ  வட்டாட்சியருக்கும் கிடையாது;  மாநில அரசுக்கும் கிடையாது. இதையெல்லாம் மறந்து விட்டு, பொதுவுடமைக் கட்சியினரை மிரட்டும் செயலில் ஈடுபட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT