தமிழகம்

“மேகேதாட்டு அணையே வேண்டாம் எனும்போது நடுவர் மன்றம் எதற்கு?” - அன்புமணி

த.சக்திவேல்

மேட்டூர்: “மேகேதாட்டு அணையே வேண்டாம் என்றால், ஏன் நடுவர் மன்றம் என்பது நம் நிலைப்பாடு” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்பணர்வு நடைபயணம் பொதுக்கூட்டம் இன்று மேட்டூரில் நடந்தது.

அந்தப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: “மேகேதாட்டு அணை குறித்து இன்றைய இளைஞர்கள், பொது மக்களுக்கும் புரிதல் இல்லை. இந்த அணையை கட்டினால் 5.5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போய்விடும். காவிரி குண்டாறு திட்டம், மதுரை காவிரி உபரிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களுக்கு காவிரி நீர்தான் கிடைக்கிறது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் காவிரி ஆற்றை நம்பிதான் உள்ளது. கர்நாடகவில் 1920-ம் ஆண்டு ஓர் அணை, 1970, 1971, 1972 ஆகிய ஆண்டுகளில் 3 அணைகள் என 4 பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. 4 அணைகளில் 115 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் 93 டிஎம்சி மட்டுமே தண்ணீர் சேமிக்கப்படுகிறது. மேகேதாட்டு அணை கட்டிவிட்டால், கர்நாடகா மேலும் 70 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் என யார் சொன்னாலும் கர்நாடகா கேட்பதில்லை. கர்நாடக முதல்வர் மேகேதாட்டு அணை குடிநீருக்காக மட்டும் கட்டுவதாக கூறுவதை நம்ப முடியுமா?

பெங்களூரு நகரின் குடிநீருக்கு 5 டிஎம்சி இருந்தால் போதும். ஆனால், 70 டிஎம்சியில் அணை தேவையா? அணை கட்டுவது தமிழகத்துக்குப் பேராபத்து, பாலைவனமாகி விடும் என்பதை உணர வேண்டும்.

மத்தியில் ஆளும் கட்சி யார் வந்தாலும் கர்நாடகவுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஏனென்றால், அங்கே காங்கிரஸ், பாஜகதான் மாறி மாறி வருகின்றனர்.

மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி திருத்தம் கொண்டுவந்ததாக சொன்னார்கள். அதில், மேகேதாட்டு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மேகேதாட்டு அணையே வேண்டாம் என்றால், ஏன் நடுவர் மன்றம் என்பது நம் நிலைப்பாடு.

இன்றைய இளைஞர்கள் அரசியல் மாற்றதை சோஷியல் மீடியாவில் கொண்டு வந்தது போன்று மேகேதாட்டு விஷயத்திலும் அதிகம் பகிர்ந்து தீர்வு கொண்டு வர வேண்டும். ஜல்லிக்கட்டு போன்று இந்த விஷயத்தை இளைஞர்கள் அணுக வேண்டும். காவிரி நம் உரிமை, அதனை மீட்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து, மேகேதாட்டு அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அன்புமணி நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், அணையின் இடதுகரையான 16 கண் மதகு பகுதியில் அன்புமணி பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், பாமக முன்னாள் எம்எல்ஏ சதாசிவம், வேலுசாமி, அதிமுக எம்எல்ஏ வெங்கடாஜலம், முன்னாள் எம்பி சந்திரசேகரன் மற்றும் பாமக, அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT