சென்னை: தந்தையும் மகனும் ஒன்றிணைய சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என பாமக செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் டிச.17-ம் தேதி நடைபெறும் பாமக ஆர்ப்பாட்டத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி.கே.மணி பேட்டி கொடுக்க வேண்டிய தேவையும், அவசியமும் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும்.
பாமகவும், கட்சியின் மாம்பழம் சின்னமும் எங்களிடம் தான் உள்ளது. பாமகவின் தலைவர் அன்புமணி தான். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாமக தொண்டர்கள் அனைவரும் அன்புமணி பக்கம் தான் உள்ளனர்.
ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக ஜி.கே.மணி தெரிவிக்கிறார். இது முழுக்க முழுக்க தவறானது.
ஜி.கே.மணி ஒருமுறை கூட அன்புமணியை சந்தித்து பேசவில்லை. மாறாக, அன்புமணிக்கு எதிராக ராமதாஸை தூண்டி விட்டார். ராமதாஸ் - அன்பு மணி ஒன்றிணைய அனைவரும் விரும்பினோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது அதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.