தமிழகம்

“சேலத்தில் கூடும் பாமக பொதுக்குழு சட்டவிரோதம்!” - தேர்தல் ஆணையத்தில் அன்புமணி புகார்

சி.கண்ணன்

ராமதாஸ் - அன்புமணி இடையிலான உட்கட்சி மோதலானது உச்சத்தில் இருக்கிறது. கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்த இரு தரப்பும், பொதுக்குழுவை கூட்டி தேர்தல் ஆணையத்தை அணுகினர். அன்புமணி தரப்பை அங்கீகரித்த தேர்தல் ஆணையம், ‘2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவராக அன்புமணியே இருப்பார்’ என்று தெரிவித்தது. மேலும், மாம்பழம் சின்னத்தையும் அன்புமணி தரப்புக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

அதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை வாங்கத் தொடங்கியது அன்புமணி தரப்பு. இதனை அறிந்த ராமதாஸ், விருப்ப மனு என்கிற பெயரில் பண மோசடி செய்வதாக அன்புமணி மீது டிஜிபிக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார்.

இதற்கிடையே, “பாமக சார்பில் ‘2025-க்கு விடை கொடுப்போம்... 2026-ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிச.29-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் சிறப்பு அழைப்பாளர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில், பாமக பெயரை தவறாகப் பயன்படுத்தி சேலத்தில் சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக செயற்குழு, பொதுக்குழு டிச.29-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக-வின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில், கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்திலும் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் பாமக தலைவர் அன்புமணிதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டவும், அதற்கு தலைமையேற்கவும் அவரைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. கட்சியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு என்ற பெயரில் ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக தலைமை முறைப்படி தெரிவித்திருக்கிறது. எனவே, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாமகவின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT