தமிழகம்

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி பிரிவு பாமக நிர்வாகிகள் சந்திப்பு!

வெற்றி மயிலோன்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி பிரிவு பாமக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பாமக வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வழங்கிய போது’ எனத் தெரிவித்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அணியில் இடம்பெற்றிருந்த பாமக, 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் தற்போது பாமக அன்புமணி தலைமையில் ஒரு பிரிவும், ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் அன்புமணி பிரிவு பாமக இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT