விழுப்புரம்: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸும், தன்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என அன்புமணியும் கூறி வருகின்றனர்.
புதிய கட்சியை அன்புமணி தொடங்கினால், அந்தக் கட்சிக்கு நல்ல ஒரு பெயரை தானே தெரிவிப்பதாக ராமதாஸ் அடிக்கடி கூறி வரும் நிலையில், ‘அய்யா பாமக’ என்ற புதிய கட்சியை நிறுவனர் ராமதாஸ் தொடங்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.
‘அன்புமணி தரப்பினரின் திட்டமிட்ட செயல் இது’ என ராமதாஸ் அணி குற்றஞ்சாட்டி வருகிறது. இதுகுறித்து பாமக (ராமதாஸ் தரப்பு) இணை பொதுச் செயலாளரான, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் கூறும்போது, “தேர்தல் ஆணையம் நல்ல முடிவை தரும்.
பாமகவை நிறுவியவர் மருத்துவர் அய்யா. தற்போது தலைவராகவும் உள்ளார். டிச. 12-ம் தேதி அய்யா நடத்தக் கூடிய ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து போய்விடும் என எதிர்தரப்பு நினைத்தது. ஆனால், மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
எங்களது போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க, எதிர்த்தரப்பினர் என்னென்னமோ நாடகம் நடத்துகின்றனர். புதிய கட்சி தொடங்க வேண்டிய அவசியம் என்ன? அனைத்து அதிகாரமும் அய்யாவிடம் இருக்கும்போது, அவர் பெயரில் ஏன் புதிய கட்சியை தொடங்க வேண்டும்? என்ன அவசியம் இருக்கிறது?” என்றார்.