தமிழகம்

“மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வரின் கருத்துக்கு அதே மேடையில் பிரதமர் பதில் அளித்திருக்க வேண்டும்” - மாணிக்கம் தாகூர்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: "மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக முதல்வர் டிகே.சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடி மவுனமாக இருந்தது கண்டிக்கத்தக்கது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் காவல் துறை நியமனங்களில் சமூக நீதி பின்பற்றப்படவில்லை என்று திருமாவளவன் கூறியிருப்பது அவருடைய கருத்து. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்கு நான் தனிப்பட்ட முறையில் பதில் கூற விரும்பவில்லை. எங்களுடைய கூட்டணிக் கட்சிகளை பொதுவெளியில் விமர்சிக்காமல் இருப்பதே எங்களுடைய அரசியல் பண்பாடு.

ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அதேபோல் தமிழகத்தில் விஜய் முதல்வராக இருக்க வேண்டும் என்பதும் எங்களுடைய நிலைப்பாடு. இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரின்றி கருகும் சூழல் நிலவுகிறது. இத்தகைய நிலையில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் மேகேதாட்டு அணை தொடர்பாகப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் தேவகவுடா, எடியூரப்பா, குமாரசாமி, டி.கே.சிவகுமார் என யார் ஆட்சியில் இருந்தாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்கு உரிய முறையில் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கர்நாடகத்தில் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், காவிரி நடுவர் மன்றம் ஒவ்வொரு மாதத்துக்கும் எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. அந்த உத்தரவின்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது.

மேகேதாட்டு குறித்து கர்நாடக முதல்வர் டிகே.சிவக்குமார் பேசியபோது பிரதமர் மோடியும் அந்த மேடையில் இருந்தார். அதற்குப் பிறகே பிரதமர் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அவர் பதில் அளித்திருக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் அரசியல் பேச்சுகளுக்கு இடமில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வரின் கருத்துக்கு பிரதமர் மவுனமாக இருந்தது தமிழக மக்கள் சார்பில் கண்டிக்கதக்கது. தமிழக விவசாயத்தைப் பாதிக்கும் தண்ணீர் பிரச்சினையை பிரதமர் முன்னிலையில் எழுப்பியபோது அதற்கு உரிய பதில் அளிக்காதது கண்டிக்கத்தக்கது.

பிரதமர் மோடி பாஜகவைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், அவர் இந்தியாவின் பிரதமர். தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதை அவர் அனுமதிக்கக் கூடாது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த வகையிலும் உதவி செய்யக் கூடாது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களுடன் ஒப்பிடும்போது தற்போது குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அரசு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அரசுப் பணிகளை மேற்கொள்ளும்போது லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை குறைந்துள்ளது.

டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் லஞ்சம், ஊழல் என்பது புற்றுநோயைப் போலப் பரவி இருந்தது. அதனைத் தடுக்க தமிழக அரசு பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை இந்த அரசின் சாதனையாக பார்க்கிறேன். பள்ளி, நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். யாருக்கு கமிஷன் சென்றது என்பதும் கண்டறியப்பட வேண்டும்.

உதயநிதி ஸ்டாலினின் அரசியல் அணுகுமுறையும், அவரைச் சுற்றியுள்ள சிலரின் செயல்பாடுகளும் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்துடனான காங்கிரஸ் கூட்டணி நீண்டகால உறவாக இருக்கும். கூட்டணியை முறித்துக்கொள்வது போன்ற எண்ணம் எங்களிடம் இல்லை. விஜய்யும் இந்த உறவை நீண்டகால உறவாகவே கருதுகிறார். மற்றவர்கள் தேவையில்லாமல் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையாகவும், தெளிவாகவும் இருக்கிறோம்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் கூறியதாகச் சொல்லப்படும் தகவல் குறித்து ஏற்கெனவே சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார். நடைபெறாத ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்துவதில் அர்த்தமில்லை. சமூக வலைதளங்களில் வெளியாகும் அனைத்துத் தகவல்களுக்கும் அரசியல் தலைவர்கள் பதில் அளிக்க முடியாது. ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT