புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வரும் 3-ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
அவர் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று, ஆதரவு திரட்டுகிறார். முன்னதாக வரும் 30-ம் தேதி புதுச்சேரியில் உள்ள பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் கலந்துரையாடுகிறார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 5 ஆண்டுகளில் இரட்டை இன்ஜின் என்டிஏ அரசு புதுச்சேரி மக்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி உள்ளது. ஆகவேதான் புதுச்சேரி மக்கள் மீண்டும் என்டிஏ அரசை இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்க உள்ளனர். வரும் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு. ‘எனது வாக்குச்சாவடி வலிமையான வாக்குச் சாவடி’ - புதுச்சேரி' காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இதை ஆவலு டன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் வரும் 6-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகிறார். திருக்கனூர் கடைவீதியில் நடக்கும் என்டிஏ வேட்பாளர்களுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதனை பாஜக கட்சி வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.