தமிழகம்

“ஞானேஷ் குமாரை எப்பாடுபட்டாவது பிரதமர் மோடி காப்பாற்றுவார்” - சிஜேபி நிர்வாகி அசுதோஷ் ரங்கா

வெற்றி மயிலோன்

புது டெல்லி: “பாஜக தேர்தலில் வெற்றிபெற உதவும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார். அதனால் ஞானேஷ் குமாரை எப்பாடுபட்டாவது பிரதமர் மோடி காப்பாற்றுவார்” என சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தெரிவித்தார்.

புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, “நாங்கள் கைது செய்யப்பட்டிருந்தபோது எங்கள் வழக்கறிஞர்களுடன் பேச டெல்லி காவல்துறை அனுமதிக்கவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான எங்கள் கட்சியின் போராட்டம் தொடரும். இந்தப் போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

டெல்லியில் போர் போன்ற சூழல் நிலவுகிறது. இதற்காகப் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெட்கப்பட வேண்டும். நேற்று நாங்கள் மூவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி இடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம். எங்கள் செல்போன்களை டெல்லி காவல்துறை ஆய்வு செய்து, அதில் போலியான ஆதாரங்களைச் சேர்த்திருக்கலாம் என்று அச்சப்படுகிறோம்.

இந்த அரசாங்கம் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அந்த அரசாங்கத்தின் முடிவு நெருங்கிவிட்டது. உண்மையான தேசவிரோதியான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது. புனிதமான குருத்வாரா பங்களா சாஹிப் அவமதிக்கப்பட்டுள்ளது, இச்சம்பவம் சீக்கியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின் போது நடந்த கைது நடவடிக்கைகளில், மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக போரில் அரசாங்கம் ஈடுபட்டது. அபிஜித் திப்கே மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோரைக் கைது செய்து வைத்திருந்தபோது, ​​டெல்லி காவல்துறை மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியது, அவர்கள் இருவரும் கடத்தப்பட்டனர்.

கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் யாரும் கற்பனை செய்திராத பல நிகழ்வுகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையம் மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிராகவே எங்கள் கட்சியின் போராட்டம் அமைந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம், தனது கடமையிலிருந்து தவறிவிட்டது.

பாஜக தேர்தலில் வெற்றிபெற உதவும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார். அதனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எப்பாடுபட்டாவது பிரதமர் மோடி காப்பாற்றுவார் என்பதை அவர் நிரூபித்துவிட்டார்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT