பிரதமர் மோடி
சென்னை: ஒருநாள் பயணமாக அக்.11-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அக்.11-ம் தேதி சென்னை வருகிறார். சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளின் ஒரு பகுதியாக நிறைவடைந்துள்ள பூந்தமல்லி - வடபழனி வரையிலான 14.64 கி.மீ. தொலைவிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். பூந்தமல்லி மெட்ரோ நிலையத்தில் நடைபெறும் நிகழ்வுக்குப் பிறகு, பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் இணைந்து பயணம் செய்கின்றனர். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பிரதமருடன் இணைந்து பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும்.
இதைத்தொடர்ந்து, போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலமாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்கிறார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார். மேலும், ஐஐடி-யில் இயங்கி வரும் 10-க்கும் மேற்பட்ட முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிறுவனர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதுதவிர, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், ‘இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை’ பிரதமர் திறந்து வைக்கிறார்.
அங்கு நடைபெறும் அரசு நிகழ்வில், பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 3 தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில், மேம்படுத்தப்பட்ட பழநி, பரமக்குடி, நாமக்கல், அம்பாசமுத்திரம், வேலுார் கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள், கோவை பகுதியில் 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் காரைக்கால் - பேரளம் இடையே 23 கி.மீ. புதிய ரயில் பாதை என ரூ.700 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஐஐடி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். அதில், பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை காணொலி மூலம் திறந்துவைக்கிறார். இவ்விழாவில் பிரதமருடன் ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
கோயிலில் சிறப்பு பூஜை
பிரதமரின் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, ஐஐடியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்தபின், மாலையில் ஹெலிகாப்டர் மூலம் வேலூருக்குச் சென்று, அங்கு புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் வேலூர் விமான நிலையப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து, தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி ஆலோசனை நடத்தினர்.
பாஜகவினர் தீவிரம்
பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் போரூருக்குச் செல்லும் வழியில், விமானநிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானம் வரை ‘ரோடு ஷோ’ செல்கிறார். இப்பகுதிகளில் செங்கல்பட்டு வடக்கு, சென்னை கிழக்கு, காஞ்சி ஆகிய 3 மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
அதேபோல், போரூர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு கார் மூலமாக சென்னை ஐஐடி வரும் வழியில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து அண்ணா பல்கலை. வரை பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ செல்கிறார்.