பிரதமர் மோடி
“தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும். அப்போதுதான் மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் பிரச்சாரம் அனல் பறக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார்.
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 15-ம் தேதி நாகர்கோவிலிலும், ஏப்ரல் 18-ம் தேதி கோவையிலும் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்தப் பயணத்தின் முன்னோட்டமாக, நேற்று மாலை 4 மணியளவில் தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக விரிவான ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது திமுக அக்கூட்டணியில் அங்கம் வகித்தது. ஆனால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் எந்த உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ரயில்வே திட்டங்கள், சாலை மேம்பாடு எனப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது பாஜக அரசுதான். பாம்பன் பாலத்தின் இன்றைய நவீன மாற்றமே அதற்கு சாட்சி.
எனவே, தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும். அப்போதுதான் மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிறகு கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகி ரம்யாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, “தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயப் புழக்கம் அதிகரித்துள்ளது. இது நேரடியாகக் குடும்பங்களைப் பாதிக்கிறது. இதற்கு திமுக அரசு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.
நம்முடைய பெண் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பெண்களைச் சந்திக்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கிறார்கள், மத்திய அரசின் திட்டங்களால் அவர்கள் அடைந்த பயன்கள் என்ன என்பதைச் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணனிடம் பேசிய பிரதமர், “தமிழகத்தின் ஒவ்வொரு அரசுத் துறையும் இன்று வசூல் வேட்டைக்கான கூடாரமாக மாறிவிட்டது. திமுக அரசு ஊழலை ஒரு நிர்வாக முறையாகவே மாற்றிவிட்டது. பல அமைச்சர்கள் ஊழல் வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். ‘கமிஷன், கலெக்க் ஷன், கரப்ஷன்’ என்பதே இந்த அரசின் அடையாளமாகிவிட்டது. இதில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரிக்கை விடுத்தார்.