தமிழகம்

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ: தொண்டர்களுடன் கைகுலுக்கி உற்சாகம்

செய்திப்பிரிவு

நாகர்கோவிலில் நேற்று பாஜக, மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ மேற்கொண்டார். இதில் பங்கேற்ற ஏராளமான தொண்டர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அப்போது, தன்னைக் காண காத்திருந்த தொண்டர்களுடன் மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நாகர்கோவிலில் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் நேற்று மாலை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிற்கு மாலை 4.30 மணியளவில் வந்த அவர், அங்கு கூடிநின்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்

          

அதைத்தொடர்ந்து அவர் திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’ மேற்கொண்டார். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நின்று கொண்டே தொண்டர்களை பார்த்து வணங்கியும் கையசைத்தவாறும் சென்றனர்.

அப்போது சாலையின் இருபுறமும் காத்திருந்த தொண்டர்கள் பிரதமர் மோடியை பார்த்து உற்சாகமாக கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ‘மோடி, மோடி... பாரத் மாதாக்கி ஜே...’ என்ற உரத்த குரல் அப்பகுதி முழுவதும் ஒலித்தது. வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சாலையின் இருபுறமும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மலர்களை மோடியின் வாகனத்தின் மீது தூவி அவரை வரவேற்றனர். மெதுவாக நகர்ந்து சென்ற வாகனத்தில் இருந்த அவர், வயதானவர்கள், சிறுவர்களை பார்த்ததும் கையசைத்து வணக்கம் தெரிவித்தார். சில இடங்களில் வயதானவர்கள் கொடுத்த மலர் மற்றும் தாமரைப்பூவை பாதுகாவலர்கள் மூலம் பெற்றுக் கொண்டார்.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கை அடைந்தபோது, வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, விளையாட்டரங்கம் முன்பு இருந்த அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்த பாஜக தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு மீண்டும் ‘ரோடு ஷோ’வை தொடர்ந்தார்.

ஒரு கிலோ மீட்டர் வரை 40 நிமிடம் ‘ரோடு ஷோ’ மேற்கொண்ட மோடி, வடசேரி சந்திப்பை அடைந்ததும் அங்கிருந்த அண்ணா சிலை முன்பு அண்ணாவின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு நின்றிருந்த நாகர்கோவில் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி, கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் விஜயதரணி மற்றும் பாஜக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இதைப்போல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பாஜக வேட்பாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகளையும் அவர் சந்தித்தார்.

மேலும், சாலையோரம் அவரை பார்ப்பதற்காக காத்திருந்த தொண்டர்களிடம் நடந்து சென்று உற்சாகமாக கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அங்கு நின்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர், மற்றும் வேட்பாளர்கள் மத்தியில் நின்றவாறு, “தேசிய ஜனநாய கூட்டணி வெல்லட்டும், திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என மோடி கைகளை உயர்த்தி இந்தியில் கூறினார்.

அதைக்கேட்டு அங்கு நின்ற தொண்டர்களும் அதை உரத்த குரலில் கூறி கரகோஷமிட்டனர். நிறைவாக அவர் வடசேரி சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலையின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். ஒரு மணி நேரத்துக்கு மேல் நாகர்கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு காரி்ல் சென்றார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்றார்.

எம்.ஆர்.காந்தியை கட்டியணைத்த பிரதமர்: நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் மூத்த பாஜக நிர்வாகி எம்.ஆர்.காந்தியும், பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து பணியாற்றியபோதே நண்பர்கள். இதனால், பல்வேறு கால கட்டங்களில் குமரி மாவட்ட பாஜக நிர்வாகத்தில் எம்.ஆர்.காந்தியை கண்டுகொள்ளாமல் ஓரம் கட்டியபோதும், அவருக்கு பிரதமர் மூலம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று ‘ரோடு ஷோ’ முடிந்து வேட்பாளர்கள் வரிசையில் நின்றபோது, எம்.ஆர்.காந்தியை பார்த்ததும் அவரை பிரதமர் மோடி கட்டி அணைத்து நலம் விசாரித்தார். இதைப் பார்த்த பாஜக தொண்டர்கள் நெகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தனர்.

SCROLL FOR NEXT