தமிழகம்

“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது” - திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி பொதுக் கூட்டத்தில் பேச்சு

வேட்டையன்

திருச்சி: “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும்” என்று திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்​திர மோடி இன்று கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து ராணுவத்​துக்​குச் சொந்​த​மான விமானம் மூலம் மாலையில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்தார். ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின்னர், பஞ்​சப்​பூரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

          

அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “ஆடி மாதத்தில் காவிரி பெருகுவதுபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்ல, மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்காகவும் உழைக்கும், செயல்படும் அரசை மக்கள் விரும்புகின்றனர். அது என்டிஏ-வால் மட்டுமே தர முடியும்.

திருச்சியை சேர்ந்த தமிழக அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார். பணத்துக்காக வேலைகள் விற்கப்படும்போது நேர்மையான இளைஞர்களின் அரசு பணி கனவு பாழாகிறது. இந்த மோசடி பணமெல்லாம் எங்கே போகிறது? தமிழகத்தின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்துக்கு சென்று சேர்கிறது.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு:

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. என்டிஏ ஆட்சி அமைந்தால் பெண்கள் அச்சமின்றி வாழலாம். ஆனால், குற்றவாளிகள்தான் அஞ்சுவார்கள்.

மேற்காசிய போர்: மேற்காசிய போர் குறித்த வதந்திகளை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம். போர் காரணமாக எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை எப்படியானாலும் இந்திய மக்களின் நலன் பாதுகாக்கப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT