சென்னை வந்த பிரதமரை வரவேற்ற முதல்வர் (இடது), பழநியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கோட்ட பொது மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா. (வலது)
பழநி: அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.20.15 கோடியில் மேம்படுத்தப்பட்ட பழநி ரயில் நிலையத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்.11) பிற்பகல் 2.30 மணிக்கு திறந்து வைத்தார்.
ஆண்டுதோறும் ஆன்மிக நகரான திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு ரயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், ரயில் நிலையத்தை தரம் உயர்த்தவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், பழநி ரயில் நிலையம் ரூ.20.15 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, பயணிகளுக்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை, நடைமேடைகள், முகப்பு தோற்றம், பார்க்கிங் வசதி, மின்தூக்கி (லிப்ட்), டிஜிட்டல் லாக்கர் வசதி, நவீன கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட பழநி ரயில் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (அக்.11) பிற்பகல் 2.30 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து காணொளி மூலம் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பழநியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே கோட்ட பொது மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ், வணிக பிரிவு உதவி மேலாளர் மணிகண்டன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழநி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, ரயில் உபயோகிப்போர் சங்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.