பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்
சென்னையில் 23-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். மேலும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை சென்னை புறநகர் பகுதிகளில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜன.23-ம் தேதி தமிழகம் வருகை தரும் நிகழ்வில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் மதுரையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டு மாநாடாக நடத்தப்படவுள்ளது. சென்னையில் இம்மாநாட்டை நடத்தினால், அது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அரசியல் எழுச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என பாஜக மேலிடம் கருதுவதே இந்த மாற்றத்துக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த சென்னை மாநாட்டை வெறும் அரசியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் மேடையாகவும் அமைக்க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி அதிமுக, பாமக மற்றும் பிற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமருடன் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர்.
பிரதமரின் வருகைக்கு முன்பே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் கணக்குகளை இறுதி செய்ய பாஜக மற்றும் அதிமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் மாநாட்டை எங்கு நடத்தலாம் என்பது குறித்து பாஜக மாநில நிர்வாகிகள் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, பொதுக்கூட்டத்தை வெட்டவெளியில் நடத்தலாமா அல்லது தனியார் கல்லூரியின் பிரமாண்ட உள்ளரங்கில் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்தவகையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம், பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்.டி.சாலை, செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் மோடி பங்கேற்கும் மாநாட்டை நடத்த எந்த இடம் வசதியாக இருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடத்தை இறுதி செய்த பிறகு, விரைவில் காவல்துறையிடம் பாதுகாப்பு அனுமதி கோரப்பட உள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமரின் இந்த சென்னை வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.