பிரதமர் நரேந்​திர மோடி | கோப்புப்படம்

 
தமிழகம்

பிரதமர் மோடி ஏப்.3-ம் தேதி சென்னை வருகை

மயிலாப்பூரில் பிரச்சாரம் செய்ய திட்டம்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி ஏப்.3-ம் தேதி சென்னை வருகிறார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி மயிலாப்பூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளன. திமுக அணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

          

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. எனினும், சாத்தூர் தொகுதியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், அவிநாசியில் எல்.முருகனும், மயிலாப்பூரில் தமிழிசை சவுந்தரராஜனும் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 25-ம் தேதி மயிலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, பிரச்சார வாகனத்தில் பழனிசாமியுடன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நின்றபடி ஆதரவு கோரினார்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருகை தரவுள்ளார். அன்று புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், அதனை முடித்துவிட்டு அன்றிரவு சென்னை வந்தடைகிறார். சென்னையில் தங்கும் பிரதமர், மறுநாள் (ஏப்ரல் 4-ம் தேதி) பாஜகவின் முக்கியத் தலைவர்களுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.

பிரதமரின் இந்த வருகைக்கு முன்னதாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்பாளர்கள் அனைவரும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆயத்தப் பணிகளில் பாஜகவினர் தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT