தமிழகம்

அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய நிகழ்வு குறித்து விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய நிகழ்வு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நவம்பர் 10-ம் தேதியில் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு புலியை துரத்திச் செல்வது போன்ற காட்சிகளுடன் வீடியோக்கள் வெளியாகின. இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘முதுமலை புலிகள் சரணாலயத்தில் ஜீப் சவாரிக்கு தடை கோரிய வழக்கில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

வனத்துறைக்கு பொறுப்பு வகிக்காத அமைச்சர் எந்த அலுவலும் இல்லாமல், புலிகள் காப்பகத்துக்குள் சென்று, வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். வீடியோ காட்சிகளை அகற்றுவதற்கு முன் அவற்றை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், இது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அமைச்சரின் செயல் குற்றமா என்பதை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிபதி ஜி.கே.முத்துகுமார் அமர்வு முன்பு தலைமையிலான வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை வைத்து பொத்தாம் பொதுவாக வழக்கு தொடர முடியாது. வனவிலங்கு சட்டத்தின் எந்த விதிகள் மீறப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டது தெரிய வந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

விதிமீறல் இருப்பது என நீங்கள் கூறினால், அது தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய வேண்டுமே தவிர இடையீடு மனுவை தாக்கல் செய்யக்கூடாது’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT