சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சொந்தமான திருச்சியில் உள்ள சொத்துக்கு நிர்வாக உரிமை கோரி வி.என்.ஜானகியின் முதல் கணவரது மகன் சுரேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.மரியா கிளேட் முன்பாக நடந்தது. அப்போது சுரேந்திரன் தரப்பில், எம்ஜிஆர் தனது சொத்துக்கள் யார், யாருக்கு செல்ல வேண்டும் என்பது தொடர்பாக கடந்த 1987-ம் ஆண்டு ஒரு உயில் எழுதி வைத்தார்.
அந்த உயிலில் திருச்சியில் உள்ள சொத்து தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்த சொத்தை இதுவரை யாருக்கும் எழுதியும் கொடுக்கவில்லை.
எம்ஜிஆரின் சுயசரிதை நூலான நான் ஏன் பிறந்தேன் என்ற நூலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ஜானகி தான் எம்ஜிஆரின் வாரிசு என நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளி்த்துள்ளது.
எனவே ஜானகியின் மகனான எனக்கு அந்த சொத்தை நி்ர்வகிக்க உரிமை வழங்க வேண்டும், என வாதிடப்பட்டது. பதிலுக்கு எம்ஜிஆரின் சகோதரர் சக்கரபாணியி்ன் வாரிசுதாரர்கள் தரப்பில், ” திருச்சியில் உள்ள எம்ஜி ஆரின் சொத்தில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் தங்களையும் இந்த வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “எம்ஜிஆரின் வாரிசு ஜானகி என்பதற்கான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. ஜானகி கடந்த 1996-ல் காலமான நிலையில், 2019-ல் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்த சொத்து யார் வசம் உள்ளது என்பது தொடர்பாகவும் மனுதாரர் எந்த தகவலும் தெரிவி்க்கவில்லை” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் மனுதாரர் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடலாம், என அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.