முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
சென்னை: “2019 முதல் 2024 வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019-இன்படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் என்ஓசி-யை (NOC) வலியுறுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும். இந்தக் காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற ‘கிறிஸ்துமஸ் பெருவிழா 2025’-ல் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எங்கும் அன்பு நிறைந்திடவும், சகோதரத்துவம் தழைத்திடவும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பேசியபோது, நம்முடைய திராவிட மாடல் அரசு, சிறுபான்மையினருக்கு செய்துகொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து, எடுத்துச் சொல்லி, அதற்கு பின்பு முக்கியமான நான்கு அறிவிப்புகளை வெளியிட்டேன். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியைப் பற்றி பேசிய நிறைய பேர் எங்களின் தேவைகளையெல்லாம், கோரிக்கைகளாக வைப்பதற்கு முன்பே, அதை உணர்ந்து செய்து தருகிறீர்கள் என்று பாராட்டி பேசினார்கள்.
சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். உங்களின் வாழ்க்கையில் ஒளி நிலைபெற வேண்டும் என்று பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்துகொண்டு இருக்கிறோம்.
திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நான்கு அறிவிப்புகளை வெளியிட்டேன். அப்போது சொன்னேன். இனிகோ கேட்டால் இல்லை என்று சொல்ல முடியுமா என்று. அதனால் இந்த விழா மேடையிலும் சிரித்துக்கொண்டே ஒரு கோரிக்கையை கொடுத்திருக்கிறார். எங்கு சென்றாலும் கோரிக்கை வைப்பதுதான் அவரது வேலை. அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட நான் விரும்புகிறேன்.
அதாவது, 2019 முதல் 2024 வரை செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019-இன்படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் என்ஓசி-யை (NOC) வலியுறுத்தாமல் திட்ட அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கும் மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும்.
இனிகோவின் கோரிக்கைகள் இனி இல்லை என சொல்லக் கூடிய அளவுக்கு அறிவிப்புகள் செய்துவிட்டேன். அதனால், நீங்கள் எப்போதும்போல், நம்முடைய அரசின் சாதனை திட்டங்களை, நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று, நமக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு நான் உங்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் அனைவரும், இன்றைக்கு என்ன மாதிரியான அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சாதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கையும், உணர்வும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குதான் இருக்கிறது. அதனால்தான், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் போதும் சரி, இப்போதும் சரி, உங்கள் எல்லோரின் வாக்குரிமையையும் உறுதிசெய்ய உறுதியுடன் களப்பணி ஆற்றிகொண்டு இருக்கிறோம்.
நாட்டில், அன்புவழி நடக்கும் சமத்துவத்தை விரும்பும் சக மனிதர்களை சகோதர - சகோதரிகளாக நினைக்கும் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இந்த வலிமைமிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து, மக்களும் ஆதரவாக இருக்கும்போது, எந்த பாசிச சக்திகளாலும், ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்குத் துணையாக திராவிட முன்னேற்றக் கழகமும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும் உறுதியாக இருக்கும். அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.