புளியந்தோப்பில் அமைக்கப்பட்டு வரும் பிரத்யேக குப்பை மாற்று நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள நவீன கேப்சூல் வடிவ கன்டெய்னர்கள். | படம்: ச.கார்த்திகேயன் |
சென்னை: சென்னை மாநகராட்சியில் வீடுகள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் காம்பாக்டர் வாகனங்கள் மூலம் குப்பை மாற்றும் நிலையத்தில் கொட்டப்படும்.
பிறகு அங்கிருந்து கனரக வாகனங்கள் மூலம் கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும். இக்குப்பைகள் வழிகளில் சிதறுவதால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேட்டால் சாலைகளை ஒட்டிய குடியிருப்புவாசிகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது மாநகரின் பெரும்பாலான மண்டலங்களில் தனியார் மூலம் தூய்மைப் பணி மேற் கொள்ளப்படுகிறது. வட சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர், மணலி உள்ளிட்ட மண்டலங்களில் சென்னை என்விரோ சொல்யூஷன் நிறுவனம் தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறது.
இந்நிறுவனம் குப்பையை கொண்டு செல்லும்போது சிதறுவது, துர்நாற்றம் வீசுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க சுமார் ரூ.35 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, பிரத்யேக கேப்சூல் வடிவ கன்டெய்னர்களில் குப்பையே வெளியில் தெரியாதவாறு மூடிய நிலையில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும் குப்பைகளை அழுத்தி, அதிக அளவில் இந்த கேப்சூல்களில் கொண்டுசெல்லப்பட உள்ளது.
இதற்காக பிரத்யேக குப்பை மாற்று நிலையத்தை புளியந்தோப்பில் என்விரோ நிறுவனம் அமைத்து வருகிறது. அங்கிருந்து குப்பைகளை வெளியில் கொண்டு செல்ல 10 நவீன லாரிகள், நிலையத்துக்குள் இயக்க 2 லாரிகள் என மொத்தம் 12 லாரிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதில், 40 கேப்சூல்கள் அன்றாட பயன்பாட்டுக்கும் 8 கேப்சூல்கள் இருப்பில் வைக்கப்படவும் உள்ளன. நிலையத்துக்கு வரும் குப்பைகளை 4 நவீன அழுத்தும் இயந்திரங்கள் மூலம் மணிக்கு தலா 35 டன் வீதம் 140 டன் குப்பைகளை கேப்சூல்களில் அடைக்க முடியும்.
24 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த கன்டெய்னர்களில் 14 டன் குப்பைகளை அடைக்க முடியும். இந்நிலையம் தினமும் 840 டன் குப்பைகளை கையாளும் திறன் கொண்டது.
இந்த நவீன திட்டத்தால் குப்பை மாற்றும் நிலையம் மற்றும் குப்பை கொட்டும் வளாகம் இடையே இயக்கப்படும் லாரி நடைகள் குறையும். மேலும் போக்குவரத்து நெரிசல், வாகனப்புகை வெளியேற்றமும் குறையும். இத்திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.