சென்னை: ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்தாண்டுக்கான ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதிசெய்யும் வகையில் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் நேற்று நடைபெற்றது.
சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ராகுல்நாத் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பண்டிகை காலத்தையொட்டி கூடுதலாக இயக்கப்பட உள்ள சிறப்புப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்குத் தேவையான குடிநீர், கழிவறை மற்றும் நிழற்குடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேலும், பண்டிகை நாட்களில் கிளாம்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தின் வாயிலாக விவாதிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது மற்றும் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்துவதற்கான பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் தாம்பரம் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) பிரபாகர், கிளாம்பாக்கம் பேருந்து முனைய முதன்மை நிர்வாக அதிகாரி மாலதி, தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் குணசேகரன், மாநகர போக்குவரத்துக்கழக இணை மேலாண்மை இயக்குநர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.