சென்னை: அனைத்து உள்கட்டமைப்புகளுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நகர் சென்னையில் 5 ஆயிரம் ஏக்கரில் 2 இடங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று தமிழக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் தெரிவித்தார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சபையின் (ஃபிக்கி) தமிழக பிரிவு சார்பில், “டிஜிட்டல் இடையூறு மற்றும் உருமாற்றம் தொடர்பாக மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டை தமிழக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர்.குமார் தொடங்கி வைத்து பேசியதாவது: ஒரு சிறந்த உலகை உருவாக்க, நெறிமுறை சார்ந்த ஏஐ பயன்படுத்த வேண்டும். இந்த ஏஐ-யை பயன்படுத்துவதற்கான ஒரு சூழலமைப்பை உருவாக்க முடியும்.
அதற்குப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்துறைகளின் ஒத்துழைப்பு தேவை. உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் குமார் கூறியதாவது: ஏஐ சிட்டி என்பது ஒரு தொலை நோக்கு பார்வை. தமிழகத்தில் பயிற்சி பெற்று, படித்துவிட்டு ஒரு சிலரை தவிர பலர் வெளிநாடுகள், அண்டை மாநிலங்களுக்கு வேலைக்காக செல்கின்றனர். இதற்கு காரணம் தமிழகத்தில் இருக்கும் கட்டமைப்பு. இந்த கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலமைப்பு இருக்க வேண்டும்.
நாட்டின் எல்லா உள்கட்டமைப்பு களையும் கொண்டு, ஏஐ நகரை உருவாக்க வேண்டும். எல்லாவற்றையும் முழுமையாக உருவாக்கி, சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுவந்து, 2 ஆயிரம் ஏக்கர் முதல் 5 ஆயிரம் ஏக்கரில் ஏஐ சிட்டி உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
4 ஆயிரம் ஏக்கரில் தொடங்கி, ஒவ்வொரு கட்டமாக, 2 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். ஏஐ சிட்டிக்கு சென்னையில் 2 முதல் 3 இடங்களை தேர்வு செய்து உள்ளோம். எதிர்காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் முன்னணியில் இருக்க வேண்டுமெனில் ஏஐ கட்டாயம் மாநிலம் முழுவதும் மேம்பட வேண்டும்.
தமிழை எல்லாரும் வளர்க்க வேண்டும். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். குழந்தைகள் படித்து, அவர்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்கிவிட்டால், இங்கு இருப்பது போல மனிதவளம் வேறு எங்கும் இல்லாத நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார். தகவல் தொழில்நுட்ப துறை செயலர் அதுல் ஆனந்த் பேசுகையில், “தொழில்துறைகளுக்கு நெறிமுறை சார்ந்த வடிவமைப்பைக் கொண்ட ஏஐ தேவை.
இளைஞர்கள் தொழில்துறையில் நுழையும்போது தாங்கள் பெற்ற அறிவைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், பள்ளிகளிலேயே அவர்களுக்கு ஏஐ குறித்த பயிற்சியை அளிக்க வேண்டும்” என்றார். மாநாட்டில், ஃபிக்கி தமிழக பிரிவு தலைவர் ஜி.எஸ்.கே.வேலு, ஃபிக்கி தமிழக பிரிவு தொழில்நுட்பக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெங்கடராமன் உள்பட பலர் பேசினர்.