சென்னை: நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பல் வேறு வசதிகளுடன் கூவம் ஆற்றங்கரையை அழகுபடுத்தும் வகையில் 3 இடங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலப்பு மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள கூவம் ஆறு சீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, கூவம் ஆற்றைச் சீரமைத்து, அதன் கரைகளை அழகுபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
அந்தவகையில், இதற்காக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு: சென்னை நதிகள் சீரமைப்பு நிறுவனம் சார்பில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனம் மூலம் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, நேப்பியர் பாலம் முதல் கூவம் முகத்துவாரம் வரை 0.5 கிமீ, சுவாமி சிவானந்தா சாலை முதல் பெரியார் பாலம் வரை 1.2 கிமீ, இணைப்புச் சாலை முதல் டாம்ஸ் சாலை வரை 2 கிமீ என 3.7 கிமீ தொலைவுக்கு மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் ஆற்றின் நீரோட்டம், வெள்ள அபாயம், ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கலக்கும் இடங்கள், மண்ணின் தாங்கும் திறன் மற்றும் ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதன்படி ஆற்றங்கரை பாதுகாப்பு கட்டமைப்புகள், நடை பாதைகள், மிதிவண்டிப் பாதைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்படும்.
மேலும், ஆற்றில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், இயற்கைச்சூழலைப் பாதுகாக்கவும் தேவையான தீர்வுகள் பரிந்துரைக்கப்படும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விரிவானதிட்ட அறிக்கையைத் தயாரித்துச்சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 21 நாட்களுக்குள் வரைவு அறிக்கை, பொறியியல் வடிவமைப்புகள் மற்றும் செலவு மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த 9 நாட்களுக்குள் இறுதி அறிக்கை, அளவுப் பட்டியல் மற்றும் செயலாக்கத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை https://tntenders.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப்புள்ளிகளை நவ.3-ம் தேதி காலை 11 மணி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம். அன்றைய தினம் மதியம் 12.30-க்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.
இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.23,000 ஆகும். ஒப்பந்தத்தில் பங்கேற்கும் ஆலோசனை நிறுவனங்கள், கடந்த 7 ஆண்டுகளில் குறைந்த பட்சம் ஒரு ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்த அனுபவம் இருக்க வேண்டும்.
மேலும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதில் தொழில்நுட்ப மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெறும் நிறுவனங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
இந்தத் திட்ட அறிக்கையின் மூலம் மேம்பாட்டுப் பணிகளுக்கான வடிவமைப்புகள், செலவு மதிப்பீடுகள் மற்றும் செயலாக்க வழிமுறைகள் இறுதி செய்யப்படும். இதன் அடிப்படையில் அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.