கும்பகோணம்: “2028-ல் நடைபெற உள்ள கும்பகோணம் மாசி மகாமக விழாவுக்கு தனி அலுவலர் நியமிக்கப்படுவார்” என வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் அருள்பாலித்து வரும் துர்க்கை அம்மனை தரிசனம் செய்யவந்த வேளாண் துறை அமைச்சர் வினோத், “2028-ல் நடைபெற உள்ள மாசி மகாமகத்தையொட்டி சிறப்பு தனி அலுவலர் நியமிக்கப்படுவார். மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் மாசி மக விழா காலங்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க அதிக திறன் கொண்ட மின்மாற்றி, கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதியில் அமைப்பதற்கு மின்சாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அமைச்சர்கள் கும்பகோணத்துக்கு வந்து மகாமகம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய வர வாய்ப்புள்ளது,” என்றார் அமைச்சர்.
தொடர்ந்து பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வினோத், அங்குள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்களிடம், நோயாளிகளின் வருகை, போதிய அளவில் மருந்து, மாத்திரை உள்ளதா குறைகள் எதுவும் உள்ளதா எனக் கேட்டறிந்தார். இதேபோல் அங்கு வந்திருந்த நோயாளியிடம் ஏதேனும் குறைகள் இருந்தால், தன்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பட்டீஸ்வரம் கோயிலுக்கு சென்றபோது திருமேற்றழிகை நந்தன் மேட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தங்களது ஊருக்கு பேருந்து வசதி இல்லாததால் தினந்தோறும் எங்கள் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக அரசுப் போக்குவரத்து அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, உடனடியாக பேருந்து இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்ததால், புகார் தெரிவித்த மூதாட்டி அமைச்சர் வினோத்துக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து தான் கொண்டு வந்த விபூதி பிரசாதத்தை அமைச்சரின் நெற்றியில் இட்டார்.