மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
தமிழக பாஜகவின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் சென்னை பயணம், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவின் சட்டப்பேரவை தேர்தல் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல், நேற்று சென்னை வருவதாக இருந்தது. இதற்காக சென்னை கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
பயணம் தள்ளிப்போனதற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, சில முக்கியக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த இழுபறிகளை டெல்லியில் இருந்தபடியே பேசித் தீர்த்துவிட்டு, ஒரு தெளிவான முடிவுடன் சென்னைக்கு வருவதே சரியாக இருக்கும் என பாஜக தலைமை கருதுவதாகத் தெரிகிறது. மேலும், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அரசாங்க ரீதியான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களும் இந்தப் பயண மாற்றத்துக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த தெளிவான முடிவு கிடைக்கும், வேட்பாளர்கள் யார் என்பது தெரிந்துவிடும் என மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இந்தப் பயண மாற்றத்தால் சற்றே ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பேச்சுவார்த்தைகள் சுமூகமாகவே நடைபெற்று வருகின்றன. பிரதமருடனான முக்கியமான ஆலோசனைக் கூட்டம் 22-ம் தேதி நடைபெற உள்ளதால், பியூஷ் கோயல் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர் ஓரிரு நாட்களில் சென்னை வர அதிக வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்தார்.