பியூஷ் கோயல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலே நேரடியாக தேர்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தொகுதி பங்கீடு குறித்து பூர்வாங்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கு மேல் அதிமுக-விடம் பாஜக கேட்டு வந்த நிலையில், 20 முதல் 30 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்களை பியூஷ் கோயலே நேரடியாகத் தேர்வு செய்யும் பணியை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, பாஜக முன்னணி தலைவர்கள் சிலர் தங்களுக்கான தொகுதிகளை தேர்ந்தெடுத்து ‘ரிசர்வ்’ செய்து வைத்துள்ளனர். அதில் சிலர், கடந்த முறை தாங்கள் போட்டியிட்ட தொகுதிக்குப் பதிலாக இம்முறை வேறு தொகுதியை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இம்முறை கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பியூஷ் கோயல் தனி கவனம் செலுத்தி வருவதாகச் சொல்கிறார்கள்.
பாஜக சார்பில் பலமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும், அவர்கள் கட்சிக்காக உழைத்தவர்களாகவும் அவர்களது தொகுதியில் மக்களுக்கு பரிட்சயமான நபராகவும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் பியூஷ் கோயல் வேட்பாளர்களை தேர்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.