மதுரை: மறுசீரமைப்பு சிகிச்சை தேவைகளுக்கு தமிழக அரசின் முதல்வர் காப்பீடு திட்டம் (CMCHIS) கீழ் செலவுத்தொகை சேர்க்கப்படாததால் அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் இதில் நேரடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு காப்பீடு திட்டம், பொது சுகாதார திட்டங்கள் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ கவனிப்புகளை பெற்று வருகின்றனர்.
பக்கவாத பாதிப்புக்கு உள்ளானவர்கள் முதற்கட்ட மருத்துவ சிகிச்சைகளை மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பெற்ற பிறகு அதன் தொடர்ச்சியாக பிசியோதெரபி வசதிகளை பெறுவதில் நடைமுறை தடைகளை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.
பிசியோதெரபி போன்ற மறுசீரமைப்பு சிகிச்சை வசதிகள் பல பகுதிகளில் கிடைப்பதில்லை, அதற்கான நிதி உதவி அளிக்கும் காப்பீடு வசதிகள் இன்று வரை உருவாகவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம், தமிழ்நாடு கிளை தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: முதிர்வயது மக்கள்தொகையில் 33.9 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 17.6 சதவீதம் பேர் நீரிழிவு பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனவே பக்கவாதம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எலும்பு முறிவு அறுவைசிகிச்சை, வயது சேர்க்கை சார்ந்த உடல் இயக்க குறைபாடுகள், தலைக்காய, முதுகு தண்டுவட அறுவைச் சிகிச்சைகளுக்கு பின்பான தொடர் பிசியோதெரபி சிகிச்சை மிக அவசியமானது.
ஆனால், இத்தகைய மறுசீரமைப்பு சிகிச்சை தேவைகளுக்கு தமிழக அரசின் முதல்வர் காப்பீடு திட்டம் (CMCHIS) கீழ் செலவுத்தொகை சேர்க்கப்பட வில்லை. இதனால் சாதாரண மக்கள் பிசியோதெரபி போன்ற அத்தியாவசிய தொடர் சிகிச்சை கிடைப்பதில் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர்.
மத்திய, மாநில அரசு நலத்திட்டங்கள் மற்றும் காப்பீடு திட்டங்கள் ஆகியவை “முழுமையான மருத்துவ பராமரிப்பு என்பது தொடர்ச்சியான பிசியோதெரபி உள்ளிட்ட மறுசீரமைப்பு சிகிச்சையையும் உள்ளடக்கியது“ என்ற கோட்பாட்டை அடிப்படையாக ஏற்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், அரசு சுகாதார நல மையங்கள் என அனைத்து மட்டங்களிலும் நிரந்தர பிசியோதெரபிஸ்ட்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் இதில் நேரடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் முதியோர், ஊரகவாசிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் இயங்கும் திறனும், வாழ்க்கைத் தரமும் மேம்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.