கோப்புப் படம்
தஞ்சாவூர்: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பொங்கல் பண்டிகைக்குள் அரசு தீர்வு காணாவிட்டால், அவர்களுக்கு ஆதரவாக ஜனவரி 19-ம் தேதியில் இருந்து நாங்களும் போராடுவோம் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சங்கரப் பெருமாள், பொதுச் செயலாளர் மா.மு.சதீஷ், பொருளாளர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியான சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி 17-வது நாளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை குற்றவாளிகளைப் போல அரசு கையாள்வது அனைவருக்கும் மன வேதனையை அளிக்கிறது.
போராட்டக் களத்தில் மாற்றுத் திறன் ஆசிரியர்கள், பெண் ஆசிரியர்களை போலீஸார் கைது செய்யும் விதம் கண்டு ஆசிரியர் சமூகம் கவலை கொள்கிறது. மேலும், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக சங்க நிர்வாகிகளை கைது செய்து, அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்திருப்பது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
எனவே, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை தமிழக அரசு உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பொங்கல் பண்டிகைக்குள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையெனில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஜன.19-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு செய்து, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.