திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தத் தவறிய மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ராம ரவிக்குமார், வி.ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மேலும், நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன்பு, ராம ரவிக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமாரும், இந்து தர்ம பரிஷத் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஜெய் சுகினும் முறையிட்டனர்.
அப்போது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டமிட்டே தமிழக அரசு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை. உயர்நீதிமன்றத்திலும் தீபம் ஏற்றுவோம் என இறுதிவரை தெரிவித்துவிட்டு, உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை” என்று குற்றம்சாட்டினர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “உச்சநீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்காதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தால், அதனை பரிசீலிக்கிறோம்” என்று உறுதி அளித்தனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட வலியுறுத்தி புதிதாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகேயன் அழகர்சாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கார்த்திகை திருநாள் முடிந்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் இருப்பதை அனுமதிக்க கூடாது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு தமிழக அரசு தந்திரமான வழியில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
எனவே காலம் கடந்தாலும் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும். அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என்று நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், “மனுவின் சாராம்சங்களை பார்த்துவிட்டு, பின்னர் விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தனர்.