தமிழகம்

விஜய், உதயநிதி, தமிழிசை வேட்புமனு சொத்து விவரங்கள் குறித்த வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில், ரூ.220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதால், அவரது சொத்து விவரங்கள் முழுமையானவையா? உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என பெரம்பூர் தொகுதி வாக்காளரான, வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியிருந்த சொத்து விவரங்களுக்கும், சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுவில் தெரிவித்த சொத்து விவரங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, மயிலாப்பூர் தொகுதி வாக்காளர் கவுதம் சிவா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மூன்று வழக்குகளும், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், முதல்வர் விஜய் முதலில் தாக்கல் செய்த வேட்புமனுவை திருத்தம் செய்து புதிய மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்துவிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் குறிபிட்டிருந்த சொத்து மதிப்புகள் சரியாக உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும். ஏற்கெனவே இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஏதேனும் குறைகள் இருந்தால் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் எனவும் மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SCROLL FOR NEXT