சென்னை: தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக எம்ஜிஆர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரான திருவள்ளூர் எம்ஜிஆர் விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நேரங்களில் அரசியலில் பொது எதிரியை வீழ்த்த வேண்டுமென்பதற்காக சுயநல நோக்கில் அரசியல் கட்சிகள் தேர்தலில் முன்கூட்டியே கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இவ்வாறு தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைப்பது என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.
தேர்தலுக்கு முன்பாக அமையும் இந்த கூட்டணி மக்கள் நலனில் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. வெற்றி பெற்றால் போதும் என்ற எண்ணத்தில் நோக்கங்கள், கொள்கைகளைத் துறந்து மற்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்கள் தீர்ப்பை மதிக்காமல் அணி மாறுவதால் அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலையும் ஜனநாயக முறையில் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற தேர்தல் கூட்டணிகள், ஆணையத்தின் செயல்பாடுகளை கேலிக்கூத்தாக்கி விடுகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் ஆட்சி கவிழ்ப்பும் நடைபெற்று நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாகவே கடந்த 1970-ம் ஆண்டு ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது.
எனவே அனைத்து கட்சிகளும் தங்களது பலத்தை மக்கள் மன்றத்தில் தனித்தனியாக நிரூபிக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கக் கூடாது என தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோல தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பெரிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதால், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் மற்ற கட்சியினருடன் ஈடுகொடுத்து பிரச்சாரம் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகே அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டுமென விதிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது என்றும், தேர்தலுக்கு முன்பாக கூட்டணி அமைக்க அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மனு கூட அளிக்க முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.