மதுரை: தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் விளைவாக டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் பரவி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவிட வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதுமான அளவு உயிர்காக்கும் மருந்துகள் இருப்பில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும். மக்கள் பொறுப்புள்ள குடிமக்களாக தங்களது கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.
அரசு தரப்பில், மனுதாரர் ஏற்கெனவே இதே கோரிக்கைக்காக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரர் தாக்கல் செய்து நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு கொண்டுவந்து வாதங்களை முன்வைக்கலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.