சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.ராஜசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: குற்றம்சாட்டப்பட்ட ஜெம் வீரமணிக்கு எதிரான குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த பென் டிரைவ் ஆதாரத்தின் அடிப்படையில் வீரமணி, சாந்தி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
வீரமணி அனைத்து அரசியல் பிரமுகர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதாலும், இந்த வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாலும் மாநில போலீஸார் விசாரணை நடத்தினால் அது ஏற்புடையதாக இருக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான போட்டோ, வீடியோக்களை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதால் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி, இந்த மனுவை தாக்கல் செய்ய என்ன நிர்பந்தம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், இந்த மனுவை தாக்கல் செய்தபிறகே தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.