சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்திருப்பது சட்ட விரோதம் என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பி.ரவிராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
வழக்கறிஞர் தொழிலுக்கு என தனிப்பட்ட மாண்புகள், ஒழுக்க நெறிமுறைகள் உள்ளன. அதற்காகத்தான் வழக்கறிஞர் சட்டமே தனியாக உருவாக்கப்பட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது வணிக ரீதியிலான தொழில் அல்ல. சட்டத்தின் துணைகொண்டு நீதியை நிலைநாட்டும் உன்னதமான தொழில். ஆனால், இந்த தொழில் நெறிகளை மீறி பார் கவுன்சில் நிர்வாகம் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் ஆதரவாளரான பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்திருப்பது கடும் விமர்சனத்துக்கு உரியது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022-ம் ஆண்டு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார். அவர் கொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றம் ஒருபோதும் கூறவில்லை.
இந்த சூழலில் கடந்த ஏப்.24-ம் தேதி பேரறிவாளன், பெங்களூருவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார் என்று கூறி அவரை வழக்கறிஞராக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் பதிவு செய்திருப்பது கடும் ஆட்சேபத்துக்கு உரியது. அவரது பதிவை முன்கூட்டி வெளிப்படையாக பார் கவுன்சில் நிர்வாகிகளால் அறிவிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில், அவசர கதியில் பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
வழக்கறிஞர் சட்டத்தின்படி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஒருபோதும் வழக்கறிஞராக பதிவு செய்யக்கூடாது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை வழக்கறிஞராக பதிவு செய்திருப்பது வழக்கறிஞர் சட்டத்துக்கு விரோதமானது. இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் பெண்களை வன்கொடுமை செய்த குற்றவாளிகூட வழக்கறிஞர் ஆகலாம் என்ற நிலை உருவாகும். எனவே, பேரறிவாளன் வழக்கறிஞர் என்ற முறையில் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராகி வாதிடக்கூடாது என தடை விதித்து, அவரது வழக்கறிஞர் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.சவுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுதர்ஷனா சுந்தர் ஆஜராகி, ‘‘பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நிரபராதி எனக்கூறி விடுதலை செய்யவில்லை. மனிதாபிமான அடிப்படையில்தான் முன்கூட்டி விடுவித்துள்ளது. எனவே, வழக்கறிஞர் சட்டப்படி அவர் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்யும் தகுதியை இழந்துவிட்டார்.
எனவே, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அவரது வழக்கறிஞர் பதிவை நிறுத்தி வைக்க வேண்டும். அத்துடன் அவரை வழக்கறிஞராக பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் என்றும் அறிவிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக அகில இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்டோர் 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.