தமிழகம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்கு எதிராக வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினரில் தலா ஒருவருக்கு அரசுப் பணி வழங்க முதல்வர் விஜய் முடிவெடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் நடந்த த.வெ.க பிரசார நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 10 குழந்தைகள் 13 ஆண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர்.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கும் ஆஜராகி இருந்தனர்.

இவ்வாறு இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராகவும், மற்ற நிர்வாகிகள் அமைச்சர்களாகவும் உள்ளனர்.

இந்தச் சூழலில் வரும் ஜூலை 10-ம் தேதி தேதி தமிழக முதல்வர் விஜய் கரூர் சென்று கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க இருப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்களின் போது உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கான விதிகள் எதுவும் இல்லை.

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அந்த விசாரணையை நீர்த்துப் போக செய்யும். சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற வாய்ப்புள்ளது.

எனவே, சிபிஐ விசாரணை நிறைவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கூடாது’ என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT