தமிழகம்

கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரி வழக்கு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முந்தைய திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெருமளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சர் டி.கே.பிரபு சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்படி தமிழகத்தில் நடந்த கனிமவள கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசின் தலைமைச் செயலருக்குக் கடந்த ஆகஸ்டு மாதமே புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் எவ்வளவு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு எவ்வளவு என்பது குறித்தும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.

இதேபோல கடந்த திமுக ஆட்சியில் அரசு துறைகளில் உரிமங்கள் வழங்க சட்டப்பூர்வ கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் பேசியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் கே.ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT