புதுடெல்லி / சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டமானது, உச்ச நீதிமன்றம், இந்திரா சகானி வழக்கில் கூறிய தீர்ப்புக்கு முரணாக இருப்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மைனர் காயத்ரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த மனுக்களை நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சிவ பாலமுருகன் ஆஜராகி, ‘தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான விவகாரம் 1994-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருகிறது’ என்றார். தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் துவிவேதி ஆஜராகி, மனுதாரர்கள் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்கள் காலாவதியாகிவிட்டதாக வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ‘மனுதாரர்கள் மருத்துவப் படிப்பை நிறைவு செய்துவிட்டார்களா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘நிறைவு செய்துவிட்டார்கள்’ என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை முடித்துவிடலாம், இவை பொதுநல மனுக்கள் அல்ல. தன்னல மனுக்கள். இவற்றை தொடர்ந்து முன்னெடுக்க முகாந்திரம் இல்லை’ என்று குறிப்பிட்டு ரிட் மனுக்களை முடித்து வைத்தனர்.