வேல்முருகன் | கோப்புப் படம் 
தமிழகம்

“டெல்டா நஞ்சை நிலங்களை அழிக்கும் பெருகவாழ்ந்தான் சூரிய ஒளி மின் திட்டம் தேவையா?” - வேல்முருகன்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘டெல்டாவின் நஞ்சை நிலங்களை அழிக்கும் பெருகவாழ்ந்தான் தனியாரின் சூரிய ஒளி மின் திட்டம் தேவையா? மூன்று போகமும் விளையும் வளமான நஞ்சை நிலங்களை அழித்து, இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துவதை ஏற்க முடியாது’ என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், பெருகவாழ்ந்தான் கிராமத்தில் வளமான நஞ்சை விவசாய நிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து தெரிவித்து வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன.

காவிரி டெல்டா என்பது வெறும் புவியியல் பகுதி அல்ல. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பின் உயிர்நாடி. பல தலைமுறைகளாக நெல் விளைவித்து தமிழ்நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து வரும் இந்த வளமான நஞ்சை நிலங்களை தொழில் திட்டங்களுக்காக மாற்றுவது, உணவுப் பாதுகாப்பின் மீது நடத்தப்படும் அமைதியான தாக்குதலாகும்.

பெருகவாழ்ந்தான் மக்கள் இந்தப் பிரச்சினையை அமைதியான ஜனநாயக வழியில் எடுத்துச் சென்றுள்ளனர். துறைசார்ந்த அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முதல்வரின் தனிப்பிரிவு என பல்வேறு நிலைகளில் மீண்டும் மீண்டும் மனுக்கள் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மக்கள் மனுக்களை அலட்சியப்படுத்தும் நிர்வாகம், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையையே சிதைக்கும்.

இந்தத் திட்டம் தேவையான அனைத்து தடையில்லாச் சான்றிதழ்களையும், சுற்றுச்சூழல் மற்றும் பிற சட்ட அனுமதிகளையும் பெறாமல் பணிகளை முன்னெடுத்து வருவதாக மக்கள் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையா?

தேவையான அனுமதிகள் இல்லையெனில், எந்தச் சட்டத்தின் அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன என்பதைத் தமிழ்நாடு அரசு மக்களிடம் வெளிப்படையாக விளக்க வேண்டும். ஒரு பகுதியில் தடையில்லாச் சான்றிதழ் இல்லாத காரணத்திற்காக, கட்டிட அனுமதி ரத்து செய்யப்படும் போது, பல்வேறு அனுமதிகள் இல்லையெனக் கூறப்படும் பெருகவாழ்ந்தான் சூரிய ஒளி மின் திட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவது ஏன்? சட்டம் அனைவருக்கும் சமமானதா? அல்லது அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு மட்டும் வேறு சட்டமா?.

மேலும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக வேட்பாளர், "பெருகவாழ்ந்தான் சூரிய ஒளி மின் திட்டம் ஒரு கிராமத்தின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தின் பிரச்சினை. எங்கள் ஆட்சி அமைந்தால் இந்தத் திட்டத்தைத் தடை செய்வோம்" என்று பொதுமக்களிடம் உறுதியளித்திருந்தார். மக்களிடம் வழங்கப்பட்ட அந்த வாக்குறுதி என்னவாயிற்று?.

சூரிய மின் உற்பத்திக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிரானது அல்ல. ஆனால் விளைச்சல் தராத தரிசு நிலங்கள், தொழிற்பகுதிகள் அல்லது அதற்கேற்ற மாற்று நிலங்கள் இருக்கும்போது, மூன்று போகமும் விளையும் வளமான நஞ்சை நிலங்களை அழித்து, இப்படியான திட்டங்களைச் செயல்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பெருகவாழ்ந்தான் தனியார் சூரிய ஒளி மின் திட்டப் பணிகளை இடைக்காலமாக நிறுத்தி, அந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

மேலும், உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய சுயாதீன விசாரணைக் குழுவை அமைத்து, சட்ட மீறல்கள் ஏதேனும் நடைபெற்றுள்ளனவா? என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். சட்டவிரோதங்கள் உறுதி செய்யப்பட்டால், திட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உணவளிக்கும் விளைநிலங்களைப் பாதுகாப்பது என்பது விவசாயிகளின் கோரிக்கை மட்டுமல்ல. வருங்காலத் தலைமுறையின் உணவுப் பாதுகாப்பையும் காப்பதற்கான கடமையாகும். பெருகவாழ்ந்தான் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் துணை நிற்கும்.

தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுவதாகக் கூறப்படும் பெருகவாழ்ந்தான் தனியார் சூரிய ஒளி திட்டத்தை உடனடியாக நிறுத்தி, வளமான டெல்டா விவசாய நிலங்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT