சென்னை: தமிழக அரசின் `வெற்றிப் பயணம்' பேருந்துகளில் துணையாளர் ஒருவருடன் மாற்றுத்திறனாளிகளையும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதல்வர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் தோ.வில்சன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பா. ஜான்சி ராணி பங்கேற்றார்.
இது குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் கூறியதாவது: எங்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மானிய கோரிக்கையின் போது, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, “தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தில் பெண்கள் மற்றும் திருநர்களுடன் மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கி திட்டம் விரிவுபடுத்தப்படும்” என அறிவித்தார்.
அக்.2-ல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது அதில் மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்படாமல் விடுபட்டு இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.
எனவே, தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசின் `வெற்றிப் பயணம்' பேருந்துகளில் துணையாளர் ஒருவருடன் மாற்றுத்திறனாளிகளையும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.