அமைச்சர் விக்னேஷ்| கோப்புப் படம்

 
தமிழகம்

“டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடங்களுக்கு அனுமதி” - அமைச்சர் விக்னேஷ் தகவல்

செய்திப்பிரிவு

கோவை: “டாஸ்மாக் மதுக்கூடங்களில் உணவுக் கூடங்களும் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க உள்ளோம். தரமற்ற உணவு பொருட்களை மதுக்கூடத்தில் விற்பது கட்டுப்படுத்தப்படும்” என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் க.விக்னேஷ் தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மது கொள்முதல் நடைமுறைகளை மறுசீரமைப்பு செய்வோம். மாற்றங்கள் நிறைய வரும். அதிமுக, திமுக நடத்தும் ஆலைகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுப்பதாக சொல்கின்றனர். மொத்தம் 11 நிறுவனங்கள் இருக்கின்றன. அனைவருக்கும் சமமான ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றன.

யாரையும் பழிவாங்கும் நோக்கத்திலும், காழ்ப்புணர்ச்சியுடனும் இந்த அரசு செயல்படவில்லை. பணம் சம்பாதிப்பதற்காகவே டாஸ்மாக் துறையை கடந்த ஆட்சியாளர்கள் வைத்திருந்தனர். இதை முழுவதுமாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். மாற்றுவது என்பது தரம் உயர்த்துவது கிடையாது. போதையில்லாத தமிழகத்தை உருவாக்குவது ஆகும்.

கோவையில் விதிகளை மீறிய எஃப்.எல்.2 மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எஃப்.எல்.1 அரசு மதுபான கடைகளை முறைப்படுத்திய பின்னர், அடுத்த கட்டமாக எஃப்.எல்.2 மீது தான் எனது பார்வை இருக்கும்.

டாஸ்மாக் மதுக்கூட டெண்டர் ஒரு மாதத்தில் வந்துவிடும். அதில் உணவு கூடங்களும் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க உள்ளோம். அப்போதுதான் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை வைத்து ஆய்வுகள், நடவடிக்கை எடுக்க முடியும். தரமற்ற உணவு பொருட்களை மதுக்கூடத்தில் விற்பது கட்டுப்படுத்தப்படும். விரைவில் தமிழக முதல்வர் கோவை வருவார்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT