கோப்புப் படம் 
தமிழகம்

பள்ளிக்கரணையில் குடியிருப்புகள் கட்ட வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

உச்ச நீதிமன்றத்தை நாட ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்ட அனுமதியளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அதிமுக நிர்வாகியும், அறப்போர் இயக்கமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

          

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சதுப்பு நிலத்தை துல்லியமாக வரையறை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு, பிப்ரவரி 24-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள போது, உயர் நீதிமன்றத்தில் இணையான விசாரணை நடத்த முடியாது என்பதால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறிய நீதிபதிகள், அதிமுக நிர்வாகியும், அறப்போர் இயக்கமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது.

SCROLL FOR NEXT