தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் |கோப்புப் படம்
சென்னை: ‘கன்னியாகுமரியின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. எனவே, மிடாலம், கீழ்மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் IREL முன்னெடுத்து வரும் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது’ என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தின் மிடாலம், கீழ்மிடாலம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 1,144 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அரியவகை கனிமங்களை அகழ்ந்தெடுக்க IREL மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடற்கரை மணலில் இருந்து மோனசைட், இல்மனைட், ஜிர்கான், ரூடைல், கார்னெட், சிலிமனைட் உள்ளிட்ட அரிய வகைக் கனிமங்களை பெருமளவில் பிரித்தெடுப்பது, அப்பகுதியின் இயற்கையான மணல் அமைப்பு, கடற்கரை பாதுகாப்பு, நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அலட்சியப்படுத்த முடியாது.
ஏற்கெனவே மணவாளக்குறிச்சி பகுதியில் கனிம மணல் அகழ்வுடன் தொடர்புடைய கடலோர மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் உள்ள நிலையில், புதிய பகுதிகளில் நடவடிக்கையை விரிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது.
IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனிமச் சுரங்க நில ஒதுக்கீட்டு கால நீட்டிப்பு அரசாணையைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அத்துடன் சட்டப்பேரவையில் தெளிவான எதிர்ப்பை பதிவு செய்து, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து திட்டத்திற்கான அனுமதியை மறுக்க வலியுறுத்த வேண்டும்.
தமிழக அரசு சார்பில் சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து கடற்கரை, நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் மற்றும் கதிரியக்கப் பாதுகாப்பு குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்தின் நியாயமான கோரிக்கையைப் புறக்கணித்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் திட்டத்தை எதிர்க்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். கன்னியாகுமரியின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை.
எனவே, மிடாலம், கீழ்மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் IREL முன்னெடுத்து வரும் கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், அதைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.