சென்னை: அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருச்சி கிழக்கு உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நீட் டித்து உத்தரவிட்டது.
திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல், கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் வி.பி.மதியழகனும், விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனும், பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாச்சலமும், அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் வெற்றியை எதிர்த்து வாக்காளரான காந்திமதி நாதனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த தேர்தல் வழக்குகள் காரணமாகத் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என தடை கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த 5 தொகுதிகளிலும் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் இறுதி முடிவு காணப்படும் வரை இடைத்தேர்தலை நடத்த கூடாது என கடந்த ஜூலை 10 அன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி முதல்வர் விஜய் தரப்பிலும், சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பிலும், தேர்தல் ஆணையம் தரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நீதிபதிகள் கடந்த அக்.1-ல் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
2 தொகுதியில் வழக்கு
முடிவு தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்பதற்காக அவருடைய வெற்றியை எதிர்த்து தொடரப்படும் தேர்தல் வழக்கை புறக்கணிக்க முடியாது.
அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்து சட்ட ரீதியாக தடை நீங்கி விட்டதால், அந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் நடத்திக் கொள்ளலாம்.
இந்த 2 தொகுதிகளுக்கும் தொடரப்பட்ட வழக்குகளில் சட்டப்படி மேல்முறையீடு அல்லது உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஏதேனும் இருந்தால் அதற்குட்பட்டு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.
அதேநேரம், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் வழக்குகளில் தீர்வு காணப்பட்ட பிறகே இடைத்தேர்தலை நடத்த முடியும். எனவே, அந்த தொகுதிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கிறோம்.
மேலும் தேர்தல் வழக்குகள் காரணமாக இடைத்தேர் தலை நடத்த முடியாமல் போன காலகட்டத்தை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வரையறை செய்துள்ள காலக்கெடுவுடன் சேர்த்து கணக்கிட கூடாது.
நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட தரப்பினர் அதற்குரிய மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப் பளித்தனர்.