கோப்புப் படம் 

 
தமிழகம்

விருதுநகரில் தடை விதிக்கப்பட்ட 23 பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்க அனுமதி

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறை மீறல்களால் தடை விதிக்கப்பட்ட 80 பட்டாசு ஆலைகளில் 23 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 1,130 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 600-க்கும் மேற்பட்டவை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்குகின்றன. அதோடு, மாவட்ட வருவாய் அலுலவரின் உரிமம் பெற்றும் பல பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் 5 அறைகளில் மட்டுமே பட்டாசு தயாரிக்க அனுமதி அளிக்கப்படும். இந்த வகை பட்டாசு ஆலைகளில் பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரிக்க அனுமதி இல்லை.

சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் 15 அறைகளுக்குள் மட்டுமே பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்கப்படும். இங்கு மத்தாப்புகள், சோல்சா வெடிகள் போன்றவை மட்டுமே தயாரிக்க அனுமதி உண்டு.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் 15-க்கும் மேற்பட்ட அறைகளுடன் கூடிய பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த வகை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் மட்டுமே பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்க அனுமதி உண்டு.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு ஆலைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கும் 80 பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதில், குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட 23 ஆலைகள் மீண்டும் இயங்க மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT