தமிழகம்

திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து 7 நாட்கள் வரையும், உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை, வார இறுதி நாட்களிலும் (சனி, ஞாயிறு) தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் தற்போது தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் பண்டிகை அல்லது பொது விடுமுறை நாட்களில் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, முதல்வர் விஜய்யை திரைப்படத் துறையினர் கடந்த மே 16-ம் தேதி சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். முக்கியமாக, திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் கலந்துபேசிய பின்னர், தமிழக தியேட்டர்கள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இனி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடப்படும். அதேபோல, உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தினமும் 5 காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு திரையரங்குகள் தனியாக அனுமதி பெறத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாரம்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. எனவே, முதல்வரின் இந்த அறிவிப்பு மூலமாக இனி அனைத்து நாட்களிலும் திரையரங்குகளில் திரைப்படங்கள் 5 காட்சிகள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT