சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையை எதிர்த்து, சுடுகாட்டில் போராட்டம் நடத்த அந்த கிராமத்தினருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்களது கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நவீன அரிசி ஆலையால் மாசு ஏற்படுகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஆலை மூடப்பட வேண்டியதுதான் என கடந்த 2010-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி செயல்பட்டு வரும் ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக, சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பம் காவல் துறையால் நிராகரிக்கப்பட்டது’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் நடத்துவோரை தடுக்கக் கூடாது என கூறி, காவல் துறைக்கு கேள்விகளை எழுப்பி, மனு குறித்து பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சுடுகாடு என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் கூறினார்.
இதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அமைதியாக போராடும் உரிமையை அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள நிலையில், போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியாது எனத் தெரிவித்தார்.
எந்த பிரச்சினையும் ஏற்படாமல் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுமானால் அந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்க முடியாது என கூறிய நீதிபதி, கிராம மக்கள் நவம்பர் 29-ம் தேதி போராட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
போராட்டம் நடைபெறும் போது தகனம் செய்வதற்கு உடல் எதுவும் வந்தால் தடுக்கக் கூடாது எனவும் கிராமத்தினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக விசாரணையின்போது, ‘மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, சுடுகாட்டில் மக்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் காவல் துறைக்கு என்ன பிரச்சினை உள்ளது? மாசுபாட்டால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தங்களது பகுதியில் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவலை அரசுக்கு தெரிவிப்பதற்காக போராட்டம் நடத்துவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
இங்கு போராட்டம் நடத்துவதால், இறந்து போனவர்களின் ஆவிகள் பிரச்சினை செய்யப் போகிறதா? மக்களின் போராட்டத்தை முடக்க முடக்க, அதனால் அரசுக்கு எதிரான அதிருப்திதான் அதிகமாகும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.