சென்னை: தமிழகத்தில் 2010-ம் ஆண்டு ஆக.23-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும், ஆசிரியர்கள் தொடர்பான அரசு தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை முன்மொழிந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவை போதிக்கும் தொழில் மட்டுமல்ல. அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும்.
மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாயப் பணியாக உள்ளன.
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யவதற்குரிய தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாகக் குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் வேளையில், டெட் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பணியில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்.1-ம் தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் சுமார் 3 லட்சத்து 28,701 பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வைப் பெற இயலும். மேலும், தேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனு மீது கடந்த மே 29-ம் தேதி வெளியான தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள், 2028-ம் ஆண்டு ஆக.31-ம் தேதிக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களைத், தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும்.
எனவே, இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்ட கால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இத்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
அந்தத் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிகளில் கடந்த 2010-ம் ஆண்டு ஆக.23-ம் தேதிக்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத்திருத்தம் மேற்கொண்டு, 2010-ம் ஆண்டு ஆக.23-ம் தேதிக்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் அல்லது சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பணிப் பலன்கள் தடை இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தை ஆதரித்து திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், பாமக எம்எல்ஏ ச.சிவகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்வசுவாமி, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோர் பேரவையில் பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டுக்கு 3 முறை: பணியில் தொடர தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர் நலனுக்காக 4 மாதங்களுக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு டெட் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நடப்பாண்டில் மட்டும் 3 சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும்.
அந்த வகையில் முதல் சிறப்பு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்தாண்டு நவம்பரில் வெளியானது. தொடர்ந்து ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, சிறப்பு டெட் தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) மூலமாக இணையவழியில் பயிற்சி வழங்கப்பட்டது.
அதன்பின்னர் தமிழகம் முழுவதும் சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை 4, 5-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 2 தாள்கள் கொண்ட இத்தேர்வை சுமார் 2.2 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இவ்விரு விடைத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.